உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கட்டாயமாக்கப்படும் நடைமுறை
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலில் வட்டாரத்தில் 10 சதவீதமானோரை பெண்களாகவும், மேலதிக பட்டியலில் 50 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
அதேநேரம், வேட்புமனுவில் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
எனவே, வேட்புமனு தயாரிப்பின்போது, அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |