தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனை முன்வைப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளது.
5 வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கோரிக்கைக்கு மாறாக மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சேவைகளை வழங்குவதற்குத் தேவையான தொகையாக 2.8 பில்லியன் ரூபா மதிப்பீட்டை பொலிஸ் திணைக்களம் அனுப்பியுள்ளது.
கொடுப்பனவுகள், எரிபொருள் செலவுகள், வாகனங்களை வாடகைக்கு அமர்த்துதல், தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு, எழுதுபொருட்கள் மற்றும் தற்செயலான செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்பிடப்பட்ட இந்த செலவுகள் ஆறு மடங்கு வரை பெரிய அதிகரிப்பைக் காட்டுவதாக தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் முடிவு
இந்த அதிகரிப்புகளில் 2018ஆம் ஆண்டின் உள்ளூராட்சி தேர்தலின் வாகன வாடகை செலவான 138 மில்லியன் ரூபா 745 மில்லியனாக அதிகரித்துள்ளது. எரிபொருள் கட்டண மதிப்பீடுகள் 108 மில்லியனில் இருந்து 675 மில்லியனாக அதிகரித்துள்ளது. முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழு தனது சொந்த மதிப்பீடுகளைச் செய்துள்ளது.
எனினும் பொலிஸ் திணைக்களம் அனுப்பிய புள்ளிவிபரங்கள் மிகவும் அதிகமானவை என்று தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் பொலிஸ் திணைக்களம் செலவுகளுக்கான சாட்சிய ரசீதுகளை சமர்ப்பித்த பின்னரே அவற்றுக்கான பணம் செலுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் தொடர்பான மூன்று மனுக்கள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
அதேநேரம் திறைசேரி நிதியை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்குத் தயாராவதற்குத் தேவையான 100 மில்லியனில் இருந்து 35 மில்லியனை மட்டுமே தேர்தல் ஆணைக்குழு இதுவரை பெற்றுள்ளது.