கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்கே ஜனாதிபதித்தேர்தல் : தமிழ் பொதுவேட்பாளர்
கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையாளமாகவும் இந்த தேர்தல் இருக்கும் என தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethran)தெரிவித்துள்ளதுடன் தேர்தலின் பின்னர் தமிழரசுக்கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன் எனவும் தெரிவித்தார்.
நமக்காக நாம் என்ற தேர்தல் பிரசாரப் பணிக்காக வவுனியாவிற்கு (Vavuniya) விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் முடிவுகள்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மக்கள் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றனர். சங்கு சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர்.
கடந்த எட்டு ஜனாதிபதிகளாலும் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், பல துன்பங்களை சந்தித்திருக்கின்றோம். இந்த தேர்தல் என்பது நான் வெற்றி பெறுவதற்கானதல்ல. இனம் வெற்றி பெறவேண்டும் என்பதுவே எனது இலக்கு.
இனத்தின் அடையாளமாகவே நான் நிறுத்தப்பட்டிருக்கின்றேன். எனது சின்னத்துக்கு வாக்களிக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு நீங்களே வாக்களிப்பதாகவே அர்த்தம்.
கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையளாமாகவும் இந்த தேர்தல் இருக்கும். இந்த தேர்தலின் முடிவுகள் சர்வதேசத்தின் மனசாட்சியை நிச்சயம் உறுத்தும்.இந்தியாவிற்கும் ஒரு செய்தியினை சொல்லும்.
சுயநிர்ணய உரிமை
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை வழங்கவேண்டும் என்று அரசையும் வலியுறுத்தும். கடந்தகாலங்களில் பல போராட்டங்களை தமிழினம் கண்டுள்ளது. இது புள்ளடி போடும் ஒரு போராட்டம். அனைவரும் இந்த பணியினை உறுதியுடன் செய்யவேண்டும்.
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடற்றொழிவாளர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சனை உள்ளடக்கப்பட்டிருந்தது. அது பிரதி எடுக்கப்படும் போது தற்செயலாகவே விடுபட்டுள்ளது. அந்த விடயங்கள் இறுதிப் பிரசுரத்தில் நிச்சயம் உள்ளடக்கப்படும்.
கடற்றொழிவாளர் பிரச்சினை என்பது பாரிய பிரச்சினை. இந்தியாவை பகைப்பதற்கும் வெறுப்பதற்கும் அப்பால் இந்தியாவை அணைத்துக்கொண்டு கடற்றொழிவாளர்களின் உரிமைகளை பாதுக்காக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
அத்துடன் தேர்தலின் பின்னரும் நான் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன். அதில் மாற்றுக்கருத்தில்லை.
கட்சியால் என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பம் வரும் போது அதற்கான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்குவேன் எள்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |