பருத்தித்துறையில் கோவிட் தொற்றால் வயோதிபப் பெண்ணொருவர் மரணம்!
பருத்தித்துறையில் கோவிட் வைரஸ் தொற்றால் வயோதிபப் பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தும்பளை தெற்கைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்ற குறித்த வயோதிபப் பெண் நேற்று வீடு திரும்பியிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவர் அண்மையில் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து அவர் நொச்சியாகம வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் அவருடைய குடும்பத்தினரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் கோப்பாய் கோவிட் தடுப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நொச்சியாகமவில் சேர்க்கப்பட்டிருந்த குறித்த பெண்ணைப் பராமரிப்பதற்கு யாரும் இல்லாத சூழலில் குடும்பத்தார் சேர்க்கப்பட்டிருந்த கோப்பாய் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
சிகிச்சை முடிந்து அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டே அவர் நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
எனினும், இது குறித்து மத்திய சுகாதார நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் முடிவின் அடிப்படையில் குறித்த மரணத்தை கோவிட் மரணமாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.
குறித்த வயோதிபப் பெண்ணின் சடலத்தை யாழ்ப்பாணம் - கோம்பையன்மணல் மயானத்தில் மின் தகனம் செய்யத் தீர்மானித்துள்ளோம்" - என்றார்.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
