ஏதிலிகளாக பதிவு செய்யப்படாத ஈழத்தமிழர்கள்! மத்திய அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை
பொருளாதார நெருக்கடியால் தமிழகம் சென்ற 225 ஈழத்தமிழர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு ஓராண்டாகியும் அவர்கள் ஏதிலிகளாக பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கியதிலிருந்து ஏதிலிகளாக வர தொடங்கிய ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி 19,316 குடும்பங்களைச் சேர்ந்த 58,492 பேர் இந்த முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த முகாம்களின்; குடும்பத் தலைவருக்கு மாதம் 1,500, 12 வயதுக்கு மேல் உள்ளோருக்கு 1000 ரூபா, 12 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு 500 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதனை தவிர வருடாந்த கல்வி உதவி, வீடு, மின்சாரம் உட்பட்ட குடும்பத்துக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. அவர்கள் வெளியே கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் முகாம்களுக்கு திரும்பவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி
ஆனால், 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஏதிலிகளாக வருவோரை பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் தடுத்து வைத்தனர். இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் 23.3.2022 முதல் தனுஷ்கோடிக்கு வந்த 225 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசால் ஏதிலிகளுக்கு வழங்கப்படக்கூடிய உதவித்தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை. மேலும் தமிழக அரசு மத்திய அரசிடம் தற்போது ஏதிலிகளாக வந்துள்ள ஈழத்தமிழர்களை எப்படி கருதலாம் என கருத்துக்கேட்டு மத்திய அரசின் முடிவுக்காக கடந்த ஓராண்டாக காத்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு வரும் ஈழத்தமிழர்களை ஏதிலிகளாக பதிவு
செய்து ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்போருக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க
வேண்டும்.
இதற்கு தமிழக அரசு உடனடியாக பிரதமரையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்
என்பதே மண்டபம் முகாமில் வசித்து வரும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது
என்று தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.