வடக்கு, கிழக்கில் பாரிய வேலைத்திட்டத்துடன் களமிறங்கும் அம்மான் படையணி! வெளியான தகவல்
வடக்கில் போதைப்பொருள் பாவனையை தடுக்க அம்மான் படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (06.10.2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எமது கட்சியின் தலைவர் கடந்த வாரம் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போது ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
அம்மான் படையணி உருவாக்கம்
அதாவது எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக இளைஞர்களின் கையில் எமது நாட்டின் வளர்ச்சி ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் அம்மான் படையணி என்னும் ஒரு அமைப்பை உருவாக்க இருக்கின்றோம் என கூறியிருந்தார்.
அதற்குரிய தலைமை பொறுப்பை என்னிடம் அளித்திருக்கின்றார். இந்த அம்மான் படையணி என்பது உலகம் முழுவதும் விரிவடைந்து வளர்ச்சி அடைந்து வருகின்றது.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆதரித்துள்ளார்கள். கண்டிப்பாக நமது இலக்கினை இன்னும் சில மாதங்களில் அடையக் கூடியதற்கான வேலைத்திட்டத்தை கொண்டு செல்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் சீர்திருத்தங்கள்
எதிர்வரும் தை மாதமளவில் பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை வடக்கு, கிழக்கு பகுதியிலே மேற்கொள்ள உள்ளோம். பெரும்படை ஒன்றினை கட்டியாண்ட எமது கருணா அம்மானின் (விநாயகமூர்த்தி முரளிதரன்) நெறிப்படுத்தலில் படையணிகள் செய்த சாதனைகள் பல.
இன்று நமது இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை என்று எண்ணும் அளவிற்கு வடக்கு, கிழக்கில் சீர்திருத்தங்களை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
அம்மன் படையணிக்கு உலகம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். வடக்கு, கிழக்கு உட்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் இதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.