இன்றைய மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு
இன்றையதினமும் ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மாலை 5:00 மணிக்கும் இரவு 9:30 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு
செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகலுக்குள் நுரைச்சோலை மின்நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அது சாத்தியமானால் இன்று மின்வெட்டு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் வெட்டு
எனினும் செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமைக்கு கொண்டு வர முடியாவிட்டால், இன்றும் மின்வெட்டு விதிக்க வேண்டியிருக்கும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, இன்று மேற்கொள்ளப்படும் மின்வெட்டு குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்பட உள்ளது. மின்வெட்டு ஏற்பட்டால், அது பெரும்பாலும் பிற்பகலில் ஏற்படும் எனவும் எனவே மின்வெட்டு நேரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியிடப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
லக்விஜய மின் உற்பத்தி
கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதால், அதன் 3 ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.
நுரைச்சோலை முழுமையாக மின்சாரம் பெறும் வரை ஒவ்வொரு மண்டலத்திலும் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.