திட்டமிட்டு அழிக்கப்படும் ஈழத் தமிழர் பண்பாட்டு கூறுகள்
ஈழத் தமிழர் பண்பாட்டு கூறுகள் திட்டமிட்டு எதிரிகளால் அழிக்கப்படுகின்றது எனும் குற்றச்சாட்டு தமிழ்த்தேசியவாதிகளால் மிக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இது தொடர்பான உரையாடல் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது.
அந்த வகையில் பண்பாடு பற்றிய தெளிவுபடுத்தலுடன் தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்தில் தமிழர் பண்பாட்டை பாதுகாக்க முன்னெடுத்த முன் நகர்வுகள் பற்றி விளக்கும் வகையில் இக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பண்பாடும் தமிழ்த்தேசியமும்
பண்பாடு என்பது மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் மரபுகளும் இணைந்த ஒரு தொகுதி, அதில் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும் மரபுரிமையாகப் பெறப்பட்ட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் உள்ளடங்கி உள்ளது. அண்மைக்காலமாக பண்பாடு தொடர்பான பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ் ஆய்வுகளை மேற்கொண்ட பண்பாட்டு ஆய்வாளர்கள், ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் தனது சமூக வரலாற்று படிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் தோற்றுவித்துக் கொண்ட பெளதீகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடைமுறைகள், கலை வடிவங்கள், சமூக விழுமியங்கள் போன்றவறின் ஒன்றிணைந்த ஒரு பல்கூட்டுத் தொகுதியை பண்பாடு என வரையறை செய்ய முயற்படுகின்றனர்.
அதுமட்டுமல்லாது பண்பாட்டினை பொருள் சார் பண்பாடு, பொருள்சாரப் பண்பாடு என இரு வகையாக பாகுபாடுத்தி உள்ளனர்.
பண்பாட்டு ஆய்வாளர்களின் ஆய்வின் படி ஒரு சமூகத்தின் பண்பாடு என்பது அச் சமூகத்தை சார்ந்த மக்கள் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது எனும் முடிவைத் தருகின்றது.
17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் பண்பாடு பற்றிய ஆய்வுகள் அறிவார்ந்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டன.
இக்காலப்பகுதியில் பண்பாடு ஆய்வாளர்களான அமெரிக்க மானிடவியலறிஞர் லூவி ஹென்றி மார்கன் மற்றும் ஆங்கிலேய மானிடவியலறிஞர் எட்வர்ட் பர்னட் டைவர் ஆகிய இருவரும் பண்பாடு என்பது ஒரு நேர்கோட்டில் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது என நிறுவினர்.
குறிப்பாக 1871 ஆம் ஆண்டு எட்வர்ட் பர்னட் டைவரினால் எழுதப்பட்ட தொன்மைப் பண்பாடு ( primitive culture) எனும் நூல் பண்பாடு பற்றிய ஆய்வினை அறிவியல் போக்காக மாற்றம் பெற்ற வழிவகுத்தது. இதன் விளைவு பண்பாடு பற்றிய ஆய்வுகள் புதிய பரிமாணத்தில் வளர்ச்சி பெற்ற ஆரம்பித்தன.
பண்பாடு பற்றிய ஆய்வுகளின் வளர்ச்சி தேசம், தேசியம், தேசியவாதம் எனும் எண்ணக்கருக்களை பலமான கட்டமைப்பு வடிவம் பெற்ற வழிவகுத்தது. காரணம், தேசம் தேசியம் தேசியவாதம் எனும் எண்ணக்கருக்கள் தோற்றம் பெறுவதற்கு அடித்தளமாக பண்பாடு காணப்படுகின்றது.
தமிழ்த் தேசியமும் தமிழர் பண்பாடும்
இன்று எம் தமிழ்மக்கள் மனத்தில் நிலைத்துள்ள தமிழ்த்தேசிய உணர்வு தமிழர் பண்பாட்டிலிருந்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாடு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பண்பாடு ஆய்வாளர்கள் பழந் தமிழ் இலக்கியங்களில் தமிழர்களால் கையாளப்பட்ட “ சால்பு” என்ற செற்பதம் பண்பாட்டினைக் குறிக்க பயன்படுத்தப்படுள்ளது என நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் பண்பாடென நாம் அடையாளப்படுத்த முயல்வது தமிழ்மக்கள் ஒவ்வொருவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களும் மரபுரிமையாகப் பெறப்பட்ட நம்பிக்கைள் மற்றும் பழக்க வழக்கங்களின் கூட்டு வெளிப்பாடாகும்.
இங்கு தமிழர் பண்பாடு என்பது மொழி ரீதியான பண்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மொழி ரீதியாக ஒன்றிணைந்த தமிழ்மக்கள் மத்தியிலும் மத, பிரதேச , சாதி, குடும்ப ரீதியாக வேறுபட்ட பண்பாடுகள் காணப்படாலும் நாம் “தமிழர்” (மொழிப்பற்று) எனும் மொழிரீதியான பண்பாடு தமிழ்மக்களை ஏனைய பிரிவினைவாத சிந்தனைகளைக்கடந்து மொழி ரீதியான உணர்வினால் ஒன்றிணைக்கின்றது.
ஈழத் தமிழர் பண்பாடு
இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைமையை அறிமுகப்படுத்திய பிரித்தானியர் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பண்பாட்டை அழிக்க முற்பட்ட வேளை இலங்கை மக்கள் தத்தம் இன அடையாளத்தை பாதுகாக்க பண்பாட்டை இறுகப்பற்றி கொண்டனர்.
இதன் வெளிப்பாடாகவே அன்று காலத்துவ ஆட்சிக்கு எதிராக மது ஒழிப்பு இயக்கம், மத மறுமலர்ச்சி இயக்கம் போன்றன உருப்பெற்றன.
அதிலும் அநாகரிக தர்மபால தலைமையில் தோற்றம் பெற்ற பெளத்த மதமறுமலர்ச்சி இயக்கத்தின் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பெளத்த பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
இதுவே சிங்கள மக்கள் மனதில் சிங்களத் தேசியவாத உணர்வு கிளர்ந்தெழவும் வழிவகுத்தது. ஆரம்பத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்பட்ட சிங்கள பெளத்த தேசியவாத உணர்வு பின்னாளில் சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கும் தீவிர சிங்கள பெளத்த தேசியவாத உணர்வாக உருப்பெற்றது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர், அரச ஆதரவுடன் தீவிர சிங்களப் பெளத்த தேசியவாதிகள் சிறுபான்மை இன மக்களின் இன அடையாளத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டு மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில் ஒரு பகுதியாக இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
இந்நிலை தொடரும் ஆயின் நாளை ஈழத் தமிழரின் இன இருப்புக்கும் பாதகம் விளையும் என்பதை உணர்ந்த எ.ஜே.வி செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கி தமிழர் பண்பாட்டை பாதுகாக்க முனைந்தார்.
இன்று சில இளையோர் செல்வநாயகமும் தமிழரசுக்கட்சியினரும் தமிழர் பண்பாட்டு சிதைவுக்கான எதிர்பையே தமிழ்த்தேசியமாக நிறுவப்படுதினரே அன்றி தமிழர் பண்பாட்டு தொடர்பில் அவர் கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
எனினும், அவர்கள் ஓர் அடிப்படை புரிதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் தமிழ்த் தேசியம் என்பது தமிழர் பண்பாட்டில் இருந்தே உருப்பெறுகின்றது. தமிழர் பண்பாட்டினை நாம் வேர் எனக் கொண்டால் அந்த வேரில் முளைத்த விருட்சமே தமிழ்த்தேசியம்.
தமிழர் பண்பாட்டை பாதுகாப்பதில் செல்வநாயகம்
1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டத்தினூடாக ஈழத் தமிழர் நிலம் அபகரிக்கப்படுவதை தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர்.
இது தமிழ்மக்களின் பண்பாட்டு நிலதொடர்ச்சி அழிப்புக்கான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தினர். தமிழ்மக்களின் பண்பாட்டை பாதுகாக்க ஈழத் தமிழரின் தாயக நிலம் பாதுகாக்கப் பட வேண்டிய அவசியம் பற்றிய புரிதலை ஏற்படுத்தினர்.
இப் புரிதலின் வெளிப்பாடே ஈழத்தமிழர்களை நில உரிமைக்காக அரசியல் ரீதியாகவும் பின்னர் ஆயுத ரீதியாகவும் போரிடும் சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது.
இந்த கடந்தகால வரலாறு தந்தை செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் தமிழரின் பண்பாட்டு நிலத்தொடர்சியைப் பாதுகாத்து "தமிழர் தேசத்தை" வரையறை செய்யவும் பெரும் பங்காற்றினர் என்பதை புலப்படுத்துகின்றது. இரண்டாவது, 1956 ஆம் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தை தமிழரசுக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர்.
தமிழர் பண்பாட்டின் ஆணி வேராக கருதப்படும் மொழி அரச நிறுவனங்களில் பயன்பாடுத்த மறுக்கப்படுவது, தமிழ் மொழி சிதைவுக்கு வழிவகுத்து எதிர் காலத்தில் தமிழர் பண்பாட்டை இல்லாதொழித்து விடும் என்பதை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நன்கறிந்திருந்தனர்.
எனவே தமிழ்மக்கள் மனதில் தமிழ் மொழிப் பற்றை விதைத்து தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிராக தமிழ்மக்களைப் பாரிய போராட்டங்களை மேற்கொள்ள தமிழரசுக் கட்சியினர் தயார் செய்தனர். பல போராட்டங்கள் நடத்தினர். இதன் பலனாக தமிழ் மொழி அரச கரும மொழியாகப்பட்டது.
அந்தவகையில் பொருள்சாராப் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையான மொழி சார் பண்பாட்டை தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் பாதுகாத்தனர்.
மூன்று, அண்மையில் தந்தை செல்வாவின் 47 ஆண்டு நினைவுதினத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் குகதாசன், தந்தை செல்வாவின் வாழ்க்கை வரலற்றை மீள் ஞாபகப்படுத்தி இருந்தார்.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தந்தை செல்வா கிறிஸ்தவ பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் அவ்வப்பொழுது தமிழர் பண்பாடு ஆடையாகிய வெட்டி சட்டை அணிந்து பாடசாலைக்கு சென்றார் என்றும், இதை பாடசாலை அதிபர் விரும்பாத காரணத்தால், தனது பள்ளி ஆசிரியர் பணியை துறந்தார் என்பது தான்.
அத்தோடு தந்தை செல்வவா தனது திருமண நாளில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வேட்டி சட்டை அணிந்து வந்தமை மணமகள் வீட்டார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதது. இந்த இரு நிகழ்வுகளையுமே அவர் மீள் ஞாபகப்படுத்தினார்.
இவ் இரு நிகழ்வுகளும் எமக்கு தந்தை செல்வநாயகம் அரசியலுக்காக தமிழ்த்தேசியம் பேசியவர் அல்ல. அவர் உள்ளத்தில் தமிழ் பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழ்இனப்பற்று அவர் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் தொட்டு குடிகொண்டிருந்தை வெளிப்படுத்துகின்றது.
அவ் உணர்வே தந்தை செல்வாவை தமிழரின் பண்பாடு அடையாளங்களை கடைப்பிடிக்க துண்டியது . அதுவே பின்னாளில் தமிழிர் பண்பாட்டை பாதுகாக்க மதத்தை கடந்து, சிங்கள அரசுக்கு எதிராக தமிழர் பாண்பாட்டைப் பாதுகாக்க மதத்தை கடந்து, சிங்கள அரசுக்கு எதிராக தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் நந்திக் கொடியை கையில் ஏந்தி அகிம்சை வழியில் போரிட வழியமைத்துக் கொடுத்தது.
அமிர்தலிங்கமும் செ. இராசதுரை போன்றோர் தம் உணர்ச்சி மிக்க பேச்சுக்கள் மூலம் தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இப்பேச்சுக்கள் தமிழின உணர்வை தமிழ்மக்கள் மனதில் உருவாக்கியது. அதிலும் அமிர்தலிங்கத்தின் பேச்சால் கவரப்பட்ட அதிகளவான இளையோர் தமிழர் பண்பாட்டை பாதுகாக்கும் தமிழ்த் தேசியவாதிளாக உருமாறினர்.
ஈழத் தமிழரின் கலை இலக்கிய பண்பாட்டு
ஈழ வரலாற்றில் சேர் பொன் அருணாச்சலம் காலம் தொடக்கம் அமிர்தலிங்கம் காலம் வரை பலர் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றியுள்ளனர்.
ஆறுமுக நாவலர், சுவாமி விபுலானந்தர், சோமசுந்தரப் புலவர், சேவியர் தனிநாயகம் அடிகள் , கா.சிவத்தம்பி, கல்லடி வேலுப்பிள்ளை, வி.வி. வைரமுத்து என அப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவ்வாறான பல தமிழ்பண்பாட்டு பாதுகாவலர்களின் பலனாகவே அன்று ஈழத்தில் தமிழர் பண்பாடு பாதுகாக்கப்பட்டது.
செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்தில் தமிழரசுக்கட்சியினர் தமிழர் பண்பாட்டு சிதைவுக்கான எதிர்பை மட்டுமே தமிழ்த்தேசியமாக நிறுவப்படுதினர் எனும் குற்றச்சாட்டை முன்வைக்கும் இளையோர் "பண்பாடு படிமலர்ச்சி ஆய்வு" பற்றிய புரிதலை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அவர்களின் நிலைப்பாடில் மாற்றம் நிகழலாம்.
பண்பாடு ஆய்வாளரான எட்வர்ட் பர்னட் டைவர் கூற்றுப்படி ஒரு பண்பாட்டின் இப்போதைய நிலையை அதன் முந்தைய கால கட்டத்தோடு ஒப்பிடுவதன் வாயிலாக பண்பாடு படிமலர்ச்சி நிகழ்வின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.
அதன்படி தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்தில் தமிழர் பண்பாடு அருணாசலம், இராமநாதன் காலத்தில் பாதுகாக்கப்பட்டதை விட உயர்வாக பாதுகாக்கப்பட்டது எனும் முடிவைத் தருகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 13 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.