டெல்லியில் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு
எதிர்கால இந்துசமுத்திர பிராந்தியத்தில் ஈழத்தமிழரும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற தலைப்பிலான இரண்டாவது மகாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
மகாநாட்டினை லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிறுதுளி(Small Drops) தன்னார்வ தொண்டு நிறுவனமும், டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் நலனுக்கான சமூகநல அறக்கட்டளை அமைப்பும் (SWTT) இணைந்து நடத்தினர்.
ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை சார்ந்த அரசியல்
நீண்ட காலமாக ஈழத்தமிழர் விடுதலை பற்றியோ, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை சார்ந்த அரசியல் பற்றியோ பேச முடியாத சூழ்நிலை ஒன்று இந்தியாவில் நிலவியது.
இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் 10 ஆம் திகதி முதலாவது மகாநாடு மேற்படி அமைப்புக்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனையடுத்து இரண்டாவது மகாநாடு நேற்றைய தினம் டெல்லியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மண்டபமான அரசியல் சாசன கிளப்பில்(Constitution club of India) நடைபெற்றது.
இம் மகாநாட்டை சிறுதுளி தொண்டு நிறுவன நிறுவனரும், டெல்லி மகாநாட்டு அமைப்பாளருமான பாலநந்தினி(நிலா) தலைமை தாங்க, தமிழர் நலனுக்கான சமூகநல அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பெரியசாமி ஒருங்கிணைக்க மகாநாடு சிறப்பாக நடந்தேறியது.
தமிழீழம்
நிகழ்வின் தலைமை உரையில் பாலநந்தினி இந்துசமுத்திர பாதுகாப்பிற்கும், ஈழத்தமிழர் பாதுகாப்பிற்கும், இந்திய தேசிய பாதுகாப்பிற்கும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் ஜனநாயக வளர்ச்சிக்கும், விருத்திக்கும் தமிழீழம் அமைவதுதான் சரியான தீர்வாகவும், வழியாகவும், பாதுகாப்பாகவும் அமையும் என வலியுறுத்தி கூறினார்.
இந்த மகாநாட்டுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைப்புச் செயலாளர் விவேக் தத்கர் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ராஷ்டிரவாடி ஜன் விகாஸ் கட்சித் தலைவர் ஜிதேந்திர கவுசிக் ஈழத்தமிழர் பாதுகாப்பு பிரச்சினை சார்ந்து உரையாற்றினார்.
தொடர்ந்து டெல்லியில் இயங்கும் தர்ஷன் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் கல்பனாவும், தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான அக்னி சுப்பிரமணியம் அவர்களும் உரையாற்றியிருந்தனர்.
இம் மகாநாட்டில் ஈழத் தமிழர் சார்ந்து முன்நாள் போராளியும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் இன்றைய இலங்கையின் அரசியல் நிலவரம் பற்றியும் ஈழத்தமிழர் எதிர்நோக்குகின்ற பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றியும் உரையாற்றினார்.
புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து இயங்கும் நாடு கடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரான்ஸ் நாட்டுக்கான பிரதிநிதியான கோலின்ஸ் அவர்கள் உரையாற்றினார்.
நிகழ்வில் தாயகத்திலிருந்து முன்னாள் போராளிகளும், இந்தியாவின் அரசியல் பிரமுகர்களும், இந்துத்துவவாத அமைப்புக்களின் பிரமுகர்களும், இந்திய நிர்வாக பாதுகாப்பு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள். மற்றும் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் என பல்வேறு பட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.