இனமோதலில் உயிரிழந்த கல்லூரி உறுப்பினர்கள் நினைவாக கல்வி நிதியம்! பேராசிரியர் நிஷான் கனகராஜா அறிவிப்பு
இனமோதலில் உயிரிழந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி உறுப்பினர்களின் நினைவாக கல்வி நிதியம் நிறுவவதாக பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழக (University of Leicester) துணைவேந்தர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, நேற்று (23.11.2026) காலை, தான் 1973 முதல் 1985 வரை கல்வி கற்ற யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, இனமோதலின்போது உயிரிழந்த கல்லூரி உறுப்பினர்களின் நினைவாக, எதிர்கால மாணவர்களுக்கு உதவும் கல்வி நிதியம் ஒன்றைத் தனது தனிப்பட்ட நன்கொடையில் நிறுவுவதாக அறிவித்துள்ளார்.

நினைவுப் பலகை திறந்து வைப்பு
இந்த சந்தர்ப்பத்தில் “Your journey has ended but your story lives on” என்ற வாசகம் பொறித்த நினைவுப் பலகையொன்றும் அவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்தில் ஒரு சாதாரண மாணவனாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று பிரித்தானியாவின் முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றிற்குத் தலைமை தாங்கும் நிலையை அடைந்தது வரையிலான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அத்துடன் "நான் அடிக்கடி என்னையே 'இலங்கையின் புதல்வன்' என்றுதான் அழைத்துக்கொள்கிறேன். எனது விழுமியங்கள், நான் பிறந்த மண்ணாலும், எனது இளமைக்காலத்தை நான் கழித்த இடத்தாலும் வடிவமைக்கப்பட்டவை" என்று அவர் கூறியுள்ளார்.
இரு பெற்றோர்களும் ஆசிரியர்களாக இருந்த சூழலில் வளர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா, கல்வியின் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் தனது இந்த வருகை, யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்குத் தங்கள் இலட்சியங்களை நோக்கி முன்னேற ஊக்கமளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் சென்று, துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி மற்றும் பீடாதிபதிகளைச் சந்தித்து, பட்டப்பின் படிப்புகள் பீடத்தில் உரையாற்றியுள்ளார்.
இது அவரது ஒரு வார இலங்கை விஜயத்தின் ஒரு பகுதி என்பதுடன், கொழும்பில் சென் ஜோன்ஸ் பழைய மாணவர் சங்க நிகழ்விலும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.