போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி! உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை
போசாக்கின்மை நிலையிலிருந்து வேலணை பிரதேச முன்பள்ளி சிறார்களை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டுமாறு வேலணை பிரதேச முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் சயானி பாலமுரளி கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலணை பிரதேச முன்பள்ளி சிறுவர்கள், ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி பாதிப்பு
அவர் மேலும் கூறுகையில், “பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக வேலணை பிரதேசத்தில் முன்பள்ளி சிறார்களிடையே போசாக்கின்மை நிலை உருவாகி வருகின்றது.
இது சிறார்களின் கல்வியை பெரிதும் பாதிப்படைய செய்கின்றது. மேலும் எமது வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்குள் பல சிறார்களிடையே மந்த போசாக்கு நிலை காணப்படுகின்றது.
இந்நிலை தொடர்ந்தால் எமது இளம் சிறார்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் இப்பிரதேச சிறார்களின் போசாக்கு தொடர்பில் பொதுமக்களும் தன்னார்வலர்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
முன்பள்ளிகள்
குறிப்பாக எமது வேலணை பிரதேசத்தில் 35 முன்பள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றுள் புங்குடுதீவில் உள்ள ஒரு முன்பள்ளி தற்போது இயங்காத நிலையில் காணப்படுகின்றது.
அத்துடன் நயினாதீவு பகுதியிலுள்ள 4 முன்பள்ளிகளுக்கு தனியார் போசாக்குணவு வழங்க அனுசரணை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை 7 முன்பள்ளிகளுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு இதுவரை எந்தவொரு வழிமுறையும் கிடைக்கவில்லை.
இந்த 7 முன்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்குவது தொடர்பில்
தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்”
என கோரிக்கை முன்வைத்துள்ளார்.