யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவர முடியாது : சிவநேசதுரை சந்திரகாந்தன் (PHOTOS)
தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம் என்ற சூழ்நிலையில் ஊடகங்கள் உருவாக்க முயற்சிப்பதாகவும் யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கமைவாக சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவினை மேலும் அதிகரித்து இன்று முதல் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்நிகழ்வினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் நாடு பூராவும் இடம்பெற்றுள்ளன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று இந்த நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் வறிய கிராம அடையாளப்படுத்தப்பட்ட மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலும் பிரிவிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் அ.சுதாகரன்,உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் உட்பட சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 97ஆயிரம் சமுர்த்திபெறும் குடும்பங்களுக்கு இன்றைய தினம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் சுமார் 7000பேருக்கு இந்த கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின்போது சமுர்த்தி பயனாளிக்கான வீடு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டதுடன் வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் சமுர்த்தி அதிகரித்த கொடுப்பனவுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன் போது அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் நல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்தும் பயனாளிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோதிலும் அரசாங்கம் கிராம மட்ட பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
அதன் அடிப்படையிலேயே சமுர்த்தி பயனாளிகளுக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் அதிகரித்த நிதி வழங்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் அரசாங்க செலவீனங்களை மிக கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றது.
எங்களுக்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் செலவுகளை கட்டுப்படுத்துவது போன்று குடும்பங்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு பணத்தினை செலவு செய்ய வேண்டும். இன்று கிராம மட்டத்தில் இவ்வாறான நிலையேற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
சிலர் ஏதோ இலங்கைக்கு மாத்திரம் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது போன்று பேசி வருகின்றனர். இன்று சர்வதேசம் எங்கும் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது.மிக நீண்டகால முடக்கம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இந்த நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு ஒவ்வொருவரும் செயலாற்றவேண்டும். இன்று கோவிட் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்த சூழ்நிலையினை மக்கள் சிறந்த முறையில் கையாண்டு மக்கள் தமது வாழ்க்கை தரத்தினை உயர்த்துகின்ற போது தான் நாடு உயரமுடியும். இதில் வெறுமனே அரசாங்கம் பிழைவிடுகின்றது,
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியும் என்று ஊடகங்கள் உருவாக்க முனைவது தெரிகின்றது.நிச்சயமாக அப்படி செய்ய முடியாது.
எவர்தான ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்ற முடியாது. இருந்தபோதிலும் உறுதியான அரசாங்கம்,மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் இதனை மிகவும் கவனமாக முகாமைசெய்து மீண்டெழுந்துவருகின்றது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.




கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri