ரூபாவின் பெறுமதி வலுவடைந்து பொருளாதாரம் நம்பிக்கையான நிலையில் உள்ளது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய
அரசாங்கம் எடுத்த நல்ல பொருளாதார தீர்மானங்களின் விளைவாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானம் காரணமாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
புள்ளிவிபரங்கள்
2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு கையிருப்பு அளவு, 2023 பெப்ரவரி முதல் வாரத்தில் 2.1 பில்லியனாக அதிகரித்து, 23.5% வளர்ச்சியை எட்டியுள்ளது.
இது 400 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.
அனைவரையும் பாதிக்கும் உணவுப் பணவீக்கம் செப்டம்பர் 2022 நிலவரப்படி 94.9% ஆக இருந்தது. இது ஜனவரி 2023க்குள் 60.1% ஆகக் குறைந்துள்ளது.
செப்டம்பர் 2022 இல், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 29,802 ஆக இருந்தது, 261% வளர்ச்சியுடன், பெப்ரவரி 2023 இல் இது 107,639 ஆக பதிவு செய்யப்பட்டது.
பொருளாதார கொள்கை
இவை அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார கொள்கை தீர்மானங்களின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதள பாதாளத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை இந்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.