நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் அரசின் பிழையான வரி நிவாரணங்களே: கபீர் ஹாசிம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பிழையாக வரி நிவாரணங்கள் தான் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (04.10.2022) நடந்த ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் மீதான விவாதத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்ட நிவாரணத்தின் கீழ் அரசாங்கம் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி நிவாரணம் வழங்கி இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
வரி நிவாரணங்கள்
ஆனால், இந்த வரி நிவாரணங்களை எந்த அடிப்படையில் வழங்கி இருக்கிறது என்பது நாடாளுமன்றத்துக்கு தெரியாது.
நாட்டின் வருமானத்துக்கு வரி முக்கியமாகும். தற்போது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு காரணம், வரி இல்லாமல் செய்ததாகும்.
அத்துடன் அரசாங்கம் மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்ட நிவாரணத்தின் கீழ் இந்தியாவை அடிப்படையாக கொண்ட எஸ்.சி.எல் நிறுவனத்துக்கு வரி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
நாட்டுக்கு கிடைக்கும் வருமானம்
இது தகவல் தொழிநுட்ப சேவை மேற்கொள்ளும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தனது வருமானத்தில் 34 பில்லியனை வரியாக செலுத்தி இருக்கின்றது.
இந்த நிறுவனத்தின் கிளைக்கே இலங்கையில் 17வருடங்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிறுவனத்துக்கு உதவி செய்ய வேண்டும். அதற்காக பூரண காலத்துக்கு நிவாரணம் வழங்கினால், நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் தான் என்ன இதுதானா அரசாங்கத்தின் வரிக்கொள்கை.
எனவே, அரசாங்கம் மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வரி நிவாரணம் வழங்குவதற்கு முறையான திட்டம் அமைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பூரண வரி நிவாரணம் வழங்கினால், அரசாங்கத்துக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.