வெளிநாட்டு கையிருப்பிற்காக ஒரு பில்லியன் டொலர்களை இலக்கு வைத்துள்ள இலங்கை
இலங்கை ரூபாயை ஸ்திரப்படுத்த உதவும் வகையில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக இலங்கை இலக்கு வைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கிக்கு வெளிநாட்டு கையிருப்பு வழங்குவதற்காக மொத்தமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய நிதி அமைச்சர் அலி சப்ரி, நெருக்கடிக்கு தீர்வு காண குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளை இலங்கை தேடி வருவதாகவும் கூறியுள்ளார். எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கு நேரம் எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களிடம் மூன்று உத்திகள் உள்ளன. உடனடியாக அவசர நிதியைப் பெற வேண்டும். இரண்டாவதாக பிரிட்ஜ் நிதி பெறுவது. மூன்றாவதாக மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வேண்டும்,'' என்றார்.
குறுகிய காலத்தில், இலங்கை இந்தியாவுடனான கடன் வரியை நீட்டிக்க விரும்புகிறது, மேலும் ஆசிய கிளியரிங் யூனியனுக்கு பணம் செலுத்துவதற்கான அவகாசத்தையும் கோரியுள்ளது.
மருந்து, எரிவாயு மற்றும் உரத்திற்காக 300-600 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்துவதற்கு உலக வங்கியுடன் இலங்கையும் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையானது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் UNDP ஆகியவற்றின் நிதியுதவியுடன் கூடிய திட்டங்களை விரைவுபடுத்துவதன் மூலம் மிகவும் தேவையான அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் உள்ளது.
இதேவேளை, நிலையான எரிசக்தி போன்ற சில முக்கிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையும் இலங்கை எதிர்பார்த்து வருவதாக அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
