பொரளை பொது மயானத்தின் செயற்பாடுகள் முடங்கியது - உடல்களை தகனம் செய்வதில் பெரும் சிக்கல்
நிதிப் பற்றாக்குறை காரணமாக பொரளை பொது மயானத்தின் சுடுகாட்டில் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுடுகாடு செயல்படத் தேவையான எரிவாயு கிடைக்காததே இதற்குக் காரணம் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
"கொழும்பு மாநகர சபை எரிவாயு வழங்குனருக்கு சுமார் 500,000 ரூபா கடன்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்திற்கான எரிவாயு வாங்குவதற்கு நிதி இல்லை," என்று அந்த அதிகாரி கூறினார். “சில நாட்களுக்கு தகனம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்படவுள்ளது.
விநியோகஸ்தரிடம் தேவையான அளவு எரிவாயு உள்ளது, ஆனால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் தகனம் செய்ய எரிவாயு இல்லை,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இது குறித்து கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் ருவன் விஜேமுனியை தொடர்பு கொண்டபோது, பணம் செலுத்துவதில் தாமதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நிலுவைத் தொகையைத் தீர்ப்பதன் மூலம் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார்.
