ஈரான் போரினால் ஆசியாவில் கடும் பொருளாதார நெருக்கடி: அன்றாடப் பொருட்களின் விலை உயர்வு
ஈரான் மீதான போர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, ஆசியா முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த மோதலால் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
50 சதவீதம் விலை அதிகரிப்பு
இதன் விளைவாக, மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள், நூடுல்ஸ், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் சிப்ஸ் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதத் தடை ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்
இது ஆசிய சந்தைகளில் எரிவாயு விலையை 143 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகள் இந்த விலை உயர்வால் மின்சார உற்பத்தி மற்றும் தொழிற்சாலை இயக்கத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நாடுகள் மீண்டும் நிலக்கரி பயன்பாட்டிற்கு மாறத் தொடங்கியுள்ளன.

போர் நீடித்தால், ஆசியாவின் நுகர்வோர் சந்தையில் பணவீக்கம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், இது நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.