ஈரான் போரால் ஜேர்மனிக்கு பொருளாதார நெருக்கடி: விண்ணைத் தொடும் பணவீக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் போர் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால், ஜேர்மனியின் முன்னணி பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன.
இன்று புதன்கிழமை வெளியான அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 1.3%-லிருந்து 0.6% ஆகவும், 202ஆம் ஆண்டிற்கான கணிப்பு 1.4%-லிருந்து 0.9% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி விலை உயர்வு
இந்த எரிசக்தி விலை உயர்வு காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜேர்மனிக்கு சுமார் 50 பில்லியன் யூரோக்கள் ($58 பில்லியன்) வருமான இழப்பு ஏற்படும் என்றும், இது அந்நாட்டை ஏழ்மையாக்கும் என்றும் ஹாலே பொருளாதார ஆய்வு நிறுவனம் (IWH) எச்சரித்துள்ளது.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, மார்ச் மாதத்தில் ஜேர்மனியின் பணவீக்கம் 2.8% ஆக உயர்ந்துள்ளது. இது எதிர்வரும் ஆண்டுகளில் 2.9% வரை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எரிசக்தி விலை உயர்வால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதால், வீட்டு உபயோகச் செலவினங்கள் 1.6%-லிருந்து வெறும் 0.4% ஆகச் சரிந்துள்ளன.
நாட்டின் பொருளாதார மீட்சியை இந்தப் போர் கடுமையாகப் பாதித்துள்ள போதிலும், அரசின் நிதி கொள்கைகள் பொருளாதாரத்தை ஓரளவிற்குத் தாங்கிப் பிடித்து வருவதாக 'ஐஃபோ' (Ifo) பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இதற்கிடையில், அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த ஜேர்மனி நாடாளுமன்றம் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன்படி, எரிபொருள் நிலையங்கள் விலையைத் தினமும் நண்பகல் 12 மணிக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த முடியும்.

இருப்பினும், இந்த விதிமுறை விலையைக் குறைக்க உதவவில்லை என்றும், மாறாக நிறுவனங்கள் முன்கூட்டியே விலையை ஏற்றி வைக்க இது வாய்ப்பளிப்பதாகவும் ஜேர்மனியின் வாகன சங்கமான ADAC அதிருப்தி தெரிவித்துள்ளது.
தற்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 2.147 யூரோக்களாகவும், டீசல் 2.347 யூரோக்களாகவும் உயர்ந்துள்ளது.
எரிசக்தி விலையில் அரசு நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பு நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.