எரிபொருள் விலையுயர்வின் எதிரொலி! கடும் நெருக்கடியில் நாட்டு மக்கள்
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் மீண்டும் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கையின் நெருக்கடிகள் காரணமாக ஏற்கனவே பலர் நாட்டைவிட்டு வெளியேற முனைப்புக் கொண்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அதனுடன் தொடர்புடைய ஏனைய பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை இந்திய நிறுவனம் மற்றும் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகியன ,எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்ததை அடுத்து, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 177 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 207 ரூபாவாகும்.
ஒட்டோ டீசலின் விலை 111 ரூபாவிலிருந்து 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 144 ரூபாவிலிருந்து 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 77 ரூபாவிலிருந்து 87 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை இந்திய நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை, இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்த அதே அளவில் அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பு காரணமாக வாடகை முச்சக்கர வண்டியின் முதல் கிலோ மீட்டருக்கான ஆரம்ப கட்டணத்தை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம் இதுவரை இருந்த வந்த 50 ரூபா ஆரம்ப கட்டணம் 80 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து பயணிகளிடம் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு 45 ரூபாய் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகளைத் திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாகப் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 5 ரூபாயால் அதிகரிக்க வேண்டியேற்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தொடருந்துகளில் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
பேருந்துகளுக்கு விசேட சலுகைகளை வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இந்த நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகக் கொள்கலன் வாகனப் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தினால் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகக் கொள்கலன் வாகனப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்தி பொருட்களுக்கான நிலையான விலைகளை நிர்ணயம் செய்து அறிவிக்கப்போவது இல்லை என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலைகள் தொடர்பில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக விலையினை நிர்ணயிக்க முடியாது எனவும், எரிபொருள் விலை அதிகரிப்பும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும், வெதுப்பக உற்பத்தியாளர்கள் தகுதியான விலைகளில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் களஞ்சிய சாலைகளின் கட்டண அதிகரிப்பு போன்ற காரணங்களால் பால்மா இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

Veera Ep - 332: வள்ளியம்மாவிற்கு எதிராக வீரா எடுக்கும் முடிவு...வில்லதனத்தை ஆரம்பிக்கும் விஜி Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
