தமிழ் மக்களிடம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் முன்வைத்துள்ள கோரிக்கை
கிழக்கில் தமிழர்கள், தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை கருத்தில்கொண்டு தமிழ் தேசியத்தினை கொண்டு செயற்படும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் விக்னேஸ்வரன் கஜரூபன், "இன்று தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்கு பலர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் சிந்தித்து தமது வாக்குகளை பதிவு செய்யவேண்டும்.
தமிழ் தேசியம்
அதேபோன்று, தமிழ் தேசியத்தின் அடிப்படையில் செயற்படும் கட்சிகள் தங்களுக்குள் வேறுபாடுகளை மறந்து தமிழ் தேசியத்திற்கான வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
எதிர்வரும் பொதுத்தேர்தலானது வடகிழக்கு தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரு சவால்மிக்க தேர்தலாக காணப்படுகின்றது.
இன்று வடகிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் பலவாக பிளவுபட்டு நிற்கின்றன. அதேபோன்று பல சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் குழப்ப நிலையிலிருக்கும் இந்த சூழலில் தமிழ் மக்கள் அணியாக திரண்டு தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஆதரிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |