வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்
திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (04.02.2024) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, அம்பாறை மாவட்ட தலைவி த.செல்வராணி, திருகோணமலை மாவட்ட தலைவி தேவி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
அமைதி பேரணி
இது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி கருத்து தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பில் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் இணைந்து அமைதியான முறையிலான அமைதி பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம்.
இதற்காக அதனை முன்னின்று நடாத்தியதாக 16 பேருக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியதற்காக அதற்கு தடைகளை ஏற்படுத்தி எங்களை அச்சுறுத்தி இந்த நாளை தமிழர்களுக்கு அநீதியான தினம் என்பதை சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் பொலிஸாரும் அரசும் உணர்த்தியுள்ளனர்.
இலங்கை சுதந்திர தினம்
இலங்கை சுதந்திர தினம் இந்த நாட்டு மக்களுக்கான சுதந்திரதினமாக சொல்லப்பட்டாலும் எங்களுக்கு எந்த சுதந்திரமும் இல்லை.
அதன் காரணமாகவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் நாங்கள் இருக்கின்றோம்.கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இன்றைய தினம் எங்கள் தாய்மாரின் உள்ளக்குமுரல்களை வெளிப்படுத்தமுடியாத வகையில் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார்.
அவர்கள் களியாட்டங்களை நடாத்தி மகிழ்ச்சிகொள்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்கு அந்த மனநிலையில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக குரல்கொடுக்கமுடியாத, அவர்களுக்கான குரல்கொடுக்கமுடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டுவருகின்றோம்.எங்களை கைது செய்கின்றார்கள்.
எங்களை குற்றவாளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு நீதித்துறையில் கூட நாங்கள் நம்பிக்கையிழக்கும் வகையில் நீதித்துறையினைக்கூட பயன்படுத்தி எங்களை ஒடுக்கி அச்சுறுத்தி எங்களது உணர்வுகளைகூட அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
பொலிஸார் தடையுத்தரவுகளை தருவதற்காக இரவு வேளைகளில் வீடுகளுக்கு வந்து வீட்டு கதவுகளை அடித்து சத்தமிட்டு பிரயத்தனங்களை முன்னெடுத்தனர்.
எங்களது உறவினர்களையும் அச்சுறுத்தி அவர்களிடம் எங்களுக்கான தடையுத்தரவுகளை வழங்குவதற்கு எத்தனித்தனர். அத்துடன் அவர்களையும் பொலிஸார் மிரட்டியுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் சிங்கள அரசுகளுக்காக வேலை செய்வதை விடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை பாருங்கள்.
இன்று நடைபெற்றது போன்றுதான் ஒடுக்குமுறை ஒரு சுதந்திர தினத்திலும் எங்களுக்கு ஏற்படவில்லை.முன்னர் பேசும் சுதந்திரம் இருந்தது. இன்று அதுவும் அற்ற நிலைமையே காணப்படுகின்றது.
வீட்டிலிருந்து கள்ளர்களைப்போன்று ஒழிந்து திரியும் நிலைமையினை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்காக நியாயமான நீதி கிடைக்கவேண்டும். அதற்காக சர்வதேச நாடுகள் இணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றிக்கு எமது பிரச்சினைகளை கொண்டுசென்று எங்களது உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |