வடக்கு - கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை முதலில் நடத்துவது குறித்து கவனம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை முதலில் நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபைத் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்தும் பொறிமுறையின் கீழ், முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் தற்போதுள்ள அரசியல் சூழல் அரசாங்கத்திற்குச் சாதகமாக இருப்பதுடன், தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா வழங்கி வரும் அழுத்தங்களுக்கு இராஜதந்திர தீர்வாகவும் இது அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்
பழைய தேர்தல் முறையின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் 9 மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அவை அனைத்தும் தற்போது ஆளுநர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகின்றன.
மாகாண சபைத் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்தும் பொறிமுறையைப் பின்பற்றி, முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களையும், அதன்பின்னர் ஏனைய மாகாண சபைக்கான தேர்தல்களையும் நடத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவு
இது தொடர்பிலான முன்மொழிவொன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை அரசாங்கத்திற்கு ஓரளவு சாதகமாக அமைந்திருப்பதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதற்குப் பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா கொடுத்து வரும் அழுத்தங்களுக்குப் பொருத்தமான இராஜதந்திர தீர்வாகவும் இந்த நடவடிக்கை அமையும் எனப் பல தரப்பினரும் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம் இவ்வாறானதொரு ஆயத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது என்ற தகவலைக் கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர், இலங்கையின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவரிடம் மிக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
பழைய தேர்தல் முறை
குறித்த முன்மொழிவின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களைப் பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மேலும், வடக்கின் முக்கிய அரசியல்வாதிகளை அரசாங்கத்தின் பக்கம் ஈர்ப்பதுடன், அப்பகுதிகளில் விரைவான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துத் தேர்தலுக்கு அடித்தளமிடுவது மிகவும் பொருத்தமானது என சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கத்திற்கு மேலும் யோசனை தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் அனைத்து மாகாண சபைகளும் தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த தகவல்கள் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் எவ்வித அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்