அரச ஊழியர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
அரசியல் அழுத்தங்கள் இன்றி நேர்மையாகவும் பொறுப்புடனும் பணியாற்றுவதற்கான சூழல் தற்போதைய அரசாங்கத்தில் காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண அரச சேவைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 64 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (17.11.2026) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேர்மையுடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், அரச சேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் நேர்மையுடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். தற்போதைய அரசாங்கத்தில் ஊழல், இலஞ்சம் மற்றும் வீண்விரயங்களுக்கு இடமில்லை.
உத்தியோகத்தர்களுக்கு பணியின்போது பல்வேறு அழுத்தங்கள் ஏற்படக்கூடும். எனினும், அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தங்கள் இன்றி பணியாற்றக்கூடிய சூழல் காணப்படுவதால், தமது கடமைகளை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு உத்தியோகத்தர்கள் செல்லத் தயாராக இருக்க வேண்டும். நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட மறுநாளே தமது வீடுகளுக்கு அருகிலுள்ள இடங்களுக்கு நியமனம் அல்லது இடமாற்றம் கோரி வரக்கூடாது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக வாசித்து அறிந்துகொள்ள வேண்டும். குறித்த பணியிடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அதனை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழிநுட்ப அறிவு
அத்துடன், அரச சேவையின் நவீனமயமாக்கலுக்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரச அலுவலகங்களை நாடி வரும் பொதுமக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் மரியாதையுடனும் உரையாடி, சிறந்த சேவையை வழங்குவதற்கு புதிய உத்தியோகத்தர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் (வரையறுக்கப்பட்ட அடிப்படை) 49 பேருக்கும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (திறந்த அடிப்படை) 6 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், சாரதிகள் பதவிக்கு 9 பேர் நியமிக்கப்பட்டதுடன், அவர்களில் 2 பேர் வரையறுக்கப்பட்ட அடிப்படையிலும், 7 பேர் திறந்த அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கிழக்கு மாகாண அரச சேவையில் புதிதாக 64 உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
