வடக்கு கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் ஆதரவு
இந்திய கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் இழுவை மடி கடற்றொழிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(03) வட பகுதி கடற்றொழிலாளர்கள் கறுப்பு கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கிழக்கு கடற்றொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று (04.03.2024) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் வைத்து செட்டிபாளையம் கடற்றொழிலாளர்கள் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், எமது நாட்டில் குறிப்பாக வட பகுதியை இந்தியன் ரோலர் படகுகள் மூலம் இந்திய கடற்றொழிலாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர்.
கறுப்பு கொடியேந்திய ஆர்ப்பாட்டம்
இதனை நாமும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் அவர்களது இச் செயலைக் கண்டித்து நேற்று எமது சகோதர யாழ். கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் கறுப்பு கொடியேந்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்களது அப்போராட்டத்திற்கு நாம் கிழக்கு கடற்றொழிலாளர்கள் என்ற ரீதியில் எமது பூரண ஆதரவினைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக இவ்வாறு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதனால் எமது இலங்கை கடல் வளம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது.
இலங்கை கடல் வளத்திற்கு சொந்தகாரர் நாங்கள்
தான், அதனை பயன்படுத்துவதும், பாதுகாப்பதும் நாங்கள் தான். எமது கடல்
வளத்திற்குள் எந்த நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் அனுமதியில்லை, இவ்வாறு இந்திய
கடற்றொழிலாளர்கள் எல்லை கடந்து வருவதானால் எமது வளம் அழிவடைவதோடு, எமது வாழ்வதாரமும்
முற்றாக பாதிக்கப்படுகிறது.
தற்போது இந்திய கடற்றொழிலாளர்களால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினைபோல் எதிர்காலத்தில் கிழக்கிற்கும் வரலாம். இந்திய கடற்றொழிலாளர்கள் வடபகுதி கடலில் இழுவை மடியைப் பயன்படுத்திவருவதனால் தற்போதும் எமக்கும் அதன் பதிப்புக்கள் எழுந்துள்ளன.இதனால் நாமும் வெகுவாகப் பதிக்கப்படுகின்றோம்.
சுமூகமான தீர்வு
எமது கிராமத்தில் மாத்திரம் 150 இற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இப்பிரச்சினை வருமாக இருந்தால் எமது மக்களின் நிலைமை என்னவாகும். வட பகுதி கடற் பிரந்தியத்திலிருந்துதான் கிழக்கு பகுதிக்கும் மீன் இறங்குகின்றன.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்து அங்குள்ள மீன்களை வடித்துவிட்டு சென்றார்கள் என்றால் நாம் எங்கு போய் வாழ்வாதாரம் செய்வது, இந்த நிலமை நீடித்தால் வடக் கிழக்கு கடற்றொழிலாளர்கள் தற்கொலை செய்யும் நிலைமைதான் ஏற்படும்.
எனவே இழுவை வலையை வடக்கு கிழக்கிலிருந்து முற்றாகத் தடைசெய்யவேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் துரிதகதியில் செயற்பட வேண்டும்.
எனவே இந்த இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும், சுமூகமான தீர்வை இலங்கை மற்றும் இந்திய அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |