தீர்க்க முடியாத ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எம் மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரால் இன்று (30) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“உயிர் சேதம், உடைமை சேதம் மற்றும் இன முறுகல்கள் ஏற்பட காரணமாக அமைந்த ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாத பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை ஏன் சேவையில் வைத்துள்ளீர்கள்?
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம்
அவர்களுக்கு ஏன் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்குகின்றீர்கள்? இந்த தாக்குதலின் காரணமாக எந்த சம்பந்தமும் இன்றி இஸ்லாமியர்களும் கத்தோலிக்க கிறிஸ்தவ அப்பாவிகளுமே பாதிக்கப்பட்டார்கள்.
நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாத அதிகாரிகள் அரச பணிக்கே தகுதி அற்றவர்களாவர்.
பதவி நீக்கம்
எனவே, சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், புலனாய்வுத் துறையினர் போன்ற அனைவரையும் ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அல்லது ஜனாதிபதியும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |