திருத்தந்தை பிரான்சிஸின் நெகிழ வைக்கும் செயல்! கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்
உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி தினத்தை அனுஸ்டித்து வருகின்றனர். பூவுலகை மீட்க தன்னுயிரை இயேசுக்கிறிஸ்து துறந்த நாள் இன்றாகும்.
மிகவும் கொடூரமான சிலுவை சாவை ஏற்ற அந்த புனித தினத்தினை இன்று அனுஸ்டிக்கின்றோம்.
இதேவேளை, நேற்றையதினம் புனித வியாழன் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. குருத்துவம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த நாளில், இயேசுக்கிறிஸ்து தனது சீடர்களுடன் இறுதி உணவை உட்கொண்டதுடன் இறுதியாக அவர்களுடன் ஒன்றித்து இருந்த நாளாக பார்க்கப்படுகின்றது.
இயேசு கிறிஸ்து, இராவுணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்கள் ஒருவர் ஒருவருக்குப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என்றொரு பாடம் புகட்டினார். அதை ஆண்டுதோறும் நினைவுகூர்கின்ற சடங்கு அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதனை நினைவுகூரும் பொருட்டு ஒவ்வொரு புனித வியாழன் அன்றும் அருட்தந்தையர்கள் சீடர்களின் பாதம் கழுவி, முத்தமிட்டு வழிபடுவது வழமை.
நேற்றும் இதேபோன்று திருத்தந்தை பிரான்சிஸ் பாதம் கழுவும் சடங்கில் கலந்துகொண்டு மிகவும் உருக்கமான வகையில் பாதங்களை கழுவி முத்தமிட்டமையானது உலக வாழ் மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அங்கு பண்ணிரெண்டு சீடர்களாக வீற்றிருந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்பதுடன் அவர்கள் அனைவரும் சிறைக்கைதிகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் சீடர்களாக இருந்த ஒவ்வொரு பெண் சிறைக்கைதிகளும் கண்ணீர் விட்டு அழுதமை அங்கிருந்த அனைவரையுமே கண்கலங்கச் செய்தது.
வரலாற்றில் இவ்வாறு பெண்களை சீடர்களாகக் கொண்டு நடந்த முதல் புனித வியாழன் வழிபாடாக நேற்றைய வழிபாடு அடையாளப்படுத்தப்படுகின்றது.
இயேசுக் கிறிஸ்து சீடர்களின் பாதங்களை கழுவுவதன் மூலம் “நாமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட, மறக்கப்பட்ட மக்களுக்குப் பணிசெய்கின்ற மனிதர்களாக இருக்கவேண்டும்” என்ற செய்தியை இந்த உலகுக்கு வெளிப்படுத்துகின்றார் என்று முன்பொருநாள் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.
இதேபோலத் தான் நேற்றைய வழிபாடுகளின் போது திருத்தந்தை பிரான்சிஸ், பெண் சிறைக் கைதிகளின் கால்களை கழுவியதன் மூலமும் வெளிப்படுத்துகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |