சிங்களவர்களை நோக்கி நீட்டப்படும் கரம்.. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரி தொடர்பில் கம்மன்பிலவின் பரப்புரை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை என்னுடைய புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ள கருத்து சிங்கள மற்றும் கத்தோலிக்க இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதான சூத்திரதாரி யார்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி நான் எழுதிய புத்தகத்தில் பிரதான சூத்திரதாரி யார் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் நிதி வழங்கியுள்ளதை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பின்னணியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு இருப்பதாக கத்தோலிக்க சபையின் அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ளமை கவனத்துக்குரியது.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் நான் புத்தகம் எழுதி உண்மையை வெளிப்படுத்தினேன்.
எனது புத்தகம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த விடயம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார் என குறிப்பிட்டுள்ளார்.