ராஜபக்சவினர் மீது எழுந்துள்ள சந்தேகம்
அரசியல் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இலங்கையின் முன்னாள் ராஜபக்ச அரசாங்கத்தினர் பயங்கரவாத குழுவுடன் இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என இலங்கையின் ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்த கருத்து பேசுபொருளாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன,
இஸ்லாமிய அரசு இயக்கத்தினரால் ஈர்க்கப்பட்டவர்களால் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர வீடுகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு அவுஸ்திரேலியர்கள் உட்பட 269 பேர் பலியாகியதுடன், சுமார் 500 பேர் காயமடைந்திருந்தனர்.
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கிங்ஸ்பெரி விடுதி மீதான தாக்குதலில் உயிர்தப்பிய சத்துடில்லா வீரசிங்க என்பவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலுடன் ராஜபக்சவினர் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் சத்துடில்லா வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் பல குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதுவொரு பாரிய திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரணமின்றி பதவி நீக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள்
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முதல் முறையாக பகிரங்கப்படுத்தியுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, அரசியல் தலையீடுகள் காரணமாக பொலிஸாரின் விசாரணைகளில் தடம்புரள்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் எந்தவொரு விளக்கமும் இன்றி தாம் தலைமையிலான விசாரணையாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக பிரதமரோ அமைச்சரவை அமைச்சர்களோ நியமிக்கப்படுவதற்கு முன்னர் தமது விசாரணைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தம்மை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த மேலும் 22 அதிகாரிகள் உயிர்த்த ஞாயிறு விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குறித்த அதிகாரிகளின் இடமாற்றங்கள் தொடர்பாக எந்தவொரு காரணமும் கூறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சவினர் பதவியேற்க முன்னர் அதிகாரிகளுக்கு பயணத் தடை
தமது தலைமையின் கீழான 700 ற்கும் மேற்பட்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பதவியேற்கவிருந்த அரசாங்கம் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களை விசாரணை செய்யும் பொலிஸாரினை அச்சுறுத்தும் முயற்சியாகவே இந்தப் பயணத்தை பார்க்கப்பட்டதாகவும் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணத் தடையானது, மிகவும் சட்டவிரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக 90 ற்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள ரவி செனவிரத்ன, முஸ்லீம் குழுவுடன் சில புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்புகளை பேணியமை கண்டறியப்பட்டதை அடுத்து விசாரணையாளர்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இரகசியம்
அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் உதவியுடன் இந்த தொடர்புகள் கண்டறியப்பட்டதாகவும் இரகசிய இராணுவ புலனாய்வு நடவடிக்கை பிரிவினரால் பயன்படுத்தப்படும் இணைய வழி முகவரி ஊடாக தேசிய தெஹ்கீத் ஜமாத் பயங்கரவாதிகளுடன் அடிக்கடி தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்று காலை தற்கொலை படை தீவிரவாதிகளின் வீட்டிற்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்ற போதிலும் இந்த தகவல் பொலிஸாருடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சந்தர்ப்பங்களில், சில தனிநபர்கள் மற்றும் குழுக்களை தாம் விசாரணைக்கு உட்படுத்த முயன்ற போது சில தடைகளை எதிர்கொண்டதாகவும் ரவி செனவிரத்ன கூறியுள்ளார்.
தவறான தகவல்களை வழங்கிய இராணுவ புலனாய்வு
பிரிவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கிழக்கில் இரண்டு பொலிஸார் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தௌவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்குள்ள தொடர்புகளை மறைத்து, பொலிஸாருக்கு தவறான தகவல்களை இராணுவ புலனாய்வு பிரிவினர் பொலிஸாருக்கு வழங்கியதாகவும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
உளவுத்துறை தொடர்பான ரகசிய விஷயங்களை தமது அதிகாரிகள் கையாள்வதாக இராணுவ உளவுத்துறையினர் தமக்கு தெரிவித்ததால் தாம் அவர்களை மேலும் விசாரிக்கவில்லை எனவும் ரவி செனவிரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |