மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரச அதிகாரிகளின் கடமை: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (20) நடைபெற்றது.
இதனையடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் தேவை
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், அலுவலர்கள் பொதுமக்களை தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் வகையில் செயற்படக்கூடாது. அரச அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வாறு செய்து முடிக்க வேண்டும்.
மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஆளுநர் அலுவலகத்துக்கு வருகின்றார்கள். அந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களும் வினைத்திறனாக பணியாற்றவேண்டும்.
மேலும், விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினையான அவர்களின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு மற்றும் 10 சதவீதக் கழிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் விவசாய உற்பத்திப் பொருள்களை சேகரிக்கக் கூடிய மையங்களை உருவாக்குவது தொடர்பிலும் ஆராயுமாறும் பணித்தார்.
அத்துடன் சந்தைகளில் பின்பற்றப்படும் கழிவு நடைமுறை தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறும் உள்ளூராட்சி அமைச்சின் கீழான வீடமைப்புத் திட்டத்தில், மீளக்குடியமரும் மக்கள், இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் மக்கள், விதவைகளுக்கே முன்னுரிமையளிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார்.
ஆளணிப்பற்றாக்குறை
ஆளணிப்பற்றாக்குறை தொடர்பில் திணைக்களத் தலைவர்களால் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களின் மதிப்பீட்டாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் 75 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் 17, 138 குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலைமை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பூச்சியமாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய தலைவர் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஆளுநர், சட்டத்துக்கு முரணான வகையில் - தவறாகச் செயற்படும் பேருந்துகளின் உரிமங்களை உடனடியான இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பணித்தார்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களினதும் உதவி ஆணையாளர்கள் மற்றும் துறைசார் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |