காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடாத்தவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்றையதினம் (25.08.2024) அனுப்பிய அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
வேதனைகளுடன் சொல்லெனாத்துன்பங்களுடன் பல ஆண்டுகளாக தங்களுடைய உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இலங்கையை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதம் உருவாகக் காரணமானவர்கள் தங்களுடைய துரோகத்தின் வெளிப்பாடாக தமிழ் மக்களை வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள்.
சுமார் 15 ஆண்டு காலமாக இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இறுதிப்போரின் போது ஒப்படைக்கப்பட்டவர்களை காணாது படும் வேதனையில் ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்களில் சிலர் இறந்தும் விட்டார்கள், அது கொடுமை.
இந்த நிலையில், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர்.
இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.