சிறையிலுள்ள அரசியல்வாதிகளுக்கு நிலவும் ஆபத்து! அதிர்ச்சி தகவலை வழங்கிய துமிந்த திசாநாயக்க
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அரசியல்வாதிகள் கொலை செய்யப்படும் அபாயம் நிலவுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திர கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள்
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,''நான் மகசின் சிறைச்சாலையில் ஐம்பது நாட்கள் இருந்தேன். நான் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள்,போதைபொருள் கடத்தல்காரர்கள் மற்றும் முதலாளிகள்,துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள்,ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் என பெரும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெரும் புள்ளிகளுடன் ஒன்றாக சாபிட்டு படுத்துறங்கினேன்.
நான் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் புலிகளுக்கு எதிராக கதைத்துள்ளேன் மேலும் ஈஸ்டர் தாக்குலின் போது முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என பல கருத்துக்களை தெரிவித்தவன். நான் அவர்களுக்கு எதிராக கதைத்ததால் என்னை சிறையில் வைத்து கொலை செய்திருக்கலாம்.
ஆகையால் சிறைக்கு செல்லும் அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிகளாக இருக்க முடியாது. சிலவேளை நீதிமன்ற தீர்ப்புகளில் அவர்கள் விடுக்கப்படலாம்.
அதனால் அரசாங்கம் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் அரசியல்வாதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இவற்றுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் பிரச்சினை உருவாகலாம் என்பது எனது அபிப்பிராயமாகும்.''என கூறியுள்ளார்.



