சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்த குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
திருகோணமலை
அந்தவகையில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க (30) குறித்த உலர் உணவுப் பொதிகளை அரச சார்பற்ற நிறுவனமான முஸ்லிம் எயிட் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாமம், கோயிலடி, புதுக்குடியிருப்பு, பாலம்போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
செய்தி - ரோசன்
c
நுவரெலியா
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.
இதில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்றைய தினம் (30) வழங்கி வைக்கப்பட்டன.
செய்தி - கிஷாந்தன்
வடமராட்சி
வடமராட்சி - கெருடா தெற்கு நற்பணி மன்றத்தால் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று 1.12.2024 வழங்கிவைக்கப்பட்டன.
கெருடா நற்பணி மன்றத்தில் கல்வி கற்கும் மாணவர்களை அடிப்படையாக கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் 200 குடும்பங்களுக்கே இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
செய்தி - எரிமலை
ஏறாவூர்
ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்சம் ரூபாவில் நிதியுதவியுடன் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டு கழகம் 100 பொதிகளை வழங்கிவைத்தது.
செய்தி - பவன்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (1) வரை 28 நலன்புரி நிலையங்களில் இருந்து வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் சனிக்கிழமை (30) வரை மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 19 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 334 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி - ஆஷிக்
அம்பாறை
மார்க்கண்டு முதலாளியின் சமூக அறக்கட்டளை, ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்த ஜீயின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு காரைதீவு 7ஆம் பிரிவில் 60 குடும்பங்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் வைத்த வழங்கி வைத்தனர்.
செய்தி - ஷிஹான்
மட்டக்களப்பு
அதேவேளை, மட்டக்களப்பில் இறால்வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறு 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இறால் பிடிக்கும் தறுவாயில் இருந்த இறால்கள் அடித்து செல்லப்பட்டு அருகிலுள்ள ஆறுகளுக்குள் அடித்துச் சென்றுள்ளன.
செய்தி - பவன்
மன்னார்
மன்னாரிற்கு ஞாயிற்றுக்கிழமை (1) விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது எழுத்தூர் பாடசாலை, செல்வநகர் ஆலய மண்டபம் போன்ற இடங்களில் தங்கியிருந்த மக்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதியையும் வழங்கி வைத்தார்.
செய்தி - ஆஷிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |