போதைவஸ்து திட்டமிட்டு பரப்புதலுக்கு எதிராக வலி. மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!
வலி. மேற்கு பிரதேச சபையில் போதைவஸ்து பாவனைக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
வலி. மேற்கு பிரதேச சபையின் 56ஆவது கூட்டமானது இன்றைய தினம் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
போதைவஸ்து பாவனைக்கு எதிரான கண்டன பிரேரணையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நல்லதம்பி பொன்ராசா முன்வைத்திருந்தார்.
அப் பிரேரணை தொடர்பில் தெரிவிக்கையில்,
மாதகல் கரையோரம்
“இன்றைக்கு எமது பிரதேசத்தில் போதைவஸ்தின் பாவனையானது மிக மிக அதிகமாக காணப்படுகின்றது.
மாதகல் கரையோரம் ஊடாகத்தான் போதைப்பொருள் அதிகமாக வருவதாகவும் அது பின்னர் விநியோகிக்கப்படுகிறது என அனைவரும் கூறுகின்றார்கள்.
யுத்தத்தின் முடிவில் இந்தப் போதைப்பொருளானது திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.
அண்மையில் வடமராட்சியில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் போதைப் பொருள் பாவனையால் தான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் போதைப் பொருளை ஒழிப்பதற்கான வலுவான ஒரு கட்டமைப்பும் வலுவான திட்டங்களும் எம்மிடம் இல்லை. பொலிஸாரும் சரி அல்லது கடற்படையினரும் சரி எந்த நேரமும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு இருக்கும் போது இந்த போதைப்பொருள் எப்படி மக்கள் பகுதிகளுக்குள் வந்து சேர்கின்றது? கரையோர பாதுகாப்பு பணிகளை ஏன் தீவிரப்படுத்தவில்லை என நாங்கள் கேள்வி எழுப்ப வேண்டிய நிலை காணப்படுகிறது.
அதிகாரிகளின் அசமந்தம்
இந்த விடயத்தில் பாதுகாப்பு தரப்பு அசமந்தமாக இருக்கின்றதா என எமக்கு கேள்வி எழுகிறது.
இதற்கு வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் இளவாலை பொலிஸார் சேர்ந்து ஒரு கூட்டு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அதுபோல கடற்கரையோரங்களில் இருக்கின்ற கடற்படையினரும் சரியாக செயல்பட வேண்டும் என நாங்கள் பல தடவைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அவர்கள் அதனை செய்வதாக எமக்கு தெரியவில்லை.
இதனால் எமது இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதி சித்தியடையாத மாணவன் அடுத்த நிலையை பற்றி சிந்திக்காமல் கஞ்சாவுடன் வீதியில் நிற்கிறான்.
சில பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளினுள் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி வருகின்றது என எமக்கு தெரியாது. ஆனால் இது ஒரு திட்டமிட்ட செயற்பாடு என எமக்கு நன்றாக தெரிகின்றது.
இந்த செயற்பாட்டை கண்டும் காணாதது போல் இருப்பவர்கள் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
எதிர்காலத்தில் இதனை ஒழிப்பதற்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதுடன் இந்த திட்டமிட்ட போதைவஸ்து பரப்புதலுக்கு எதிரான ஒரு வலுவான கண்டன தீர்மானத்தை கொண்டு வருகின்றேன் என அவர் கூறினார்.
இந்த தீர்மானம் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த போதைவஸ்தினை ஒழிப்பதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, இந்த கண்டன தீர்மானம் தொடர்பான எழுத்து மூலமான ஆவணத்தினை சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைப்பேன் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் இது தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சியின் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் நடராசா கருத்து தெரிவிக்கையில், போதைப்பொருள் விநியோகத்திற்கு அரசாங்கம் தான் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அந்த அனுமதியை இரத்துச் செய்தால் போதைப்பொருள் எமது நாட்டிற்குள் வராது என ஈ.பி.டி.பி கட்சியின் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் நடராசா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமும் அரசியலுமே இதனை நடத்துகிறது. இவ்வாறு இருக்கையில் இங்கு நாங்கள் அப்பாவி மக்களை வீதியில் இறக்கி போதைவஸ்திற்கு எதிரான போராட்டம் செய்து எந்த பிரியோசனமுமில்லை.
இலங்கை முழுவதும் மதுவை ஒழிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இவ்வாறு நாங்கள் கடிதம் அனுப்பி அங்கேயே இந்த அனுமதியை நிறுத்தினால் இந்த அப்பாவி மக்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் ஊர் ஊராக கஞ்சா ஒழிக்க வேண்டும் என்று சென்றால் ஊரில் உள்ளவர்கள்
நீங்கள் பொலிஸா? என கேட்பார்கள். எனவே அரசாங்கம் தான் இதனை தடுக்க வேண்டும்
என்றார்.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
