யாழில் போதைப் பொருள் பாவனை இரு மடங்காக அதிகரிப்பு - பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ். காங்கேசன் துறை பொலிஸ் தலைமை நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை இரு மடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (14.01.2026) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜய பாலா தலைமையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு பிரதேச மட்ட குழுக்களை ஆரம்பிக்கும் நிகழ்விலே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பாவனையாளர்கள்
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுதாவது,
யாழ்ப்பாணத்தில் யாழ். பொலிஸ் நிலையம் மற்றும் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்தை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து எடுத்த தகவல் அடிப்படையில் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம், இரண்டு பிரதான பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய பகுதிகளில் 2025ஆம் ஆண்டு 7040 பேர் ஹெரோயின், ஐஸ், கஞ்சா மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் தொடர்புபட்ட நபர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
அதே போன்று, யாழ். பொலிஸ் தலைமை நிலையப் பகுதிகளில் கடந்த 2023ஆம் ஆண்டு 2591 பேர், 2024ஆம் ஆண்டு 2450 பேர், 2025ஆம் ஆண்டு 4380 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9 331 பேராக காணப்படுகின்ற நிலையில் கடந்த வருடம் மட்டும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இருமடங்காக அதிகரிப்பு
இந்நிலையில், காங்கேசன் துறை தலைமை பொலிஸ் நிலையத்தை உள்ளடக்கிய பகுதிகளில் போதை பொருட்களுடன் தொடர்புடைய நபர்களாக 2023ஆம் ஆண்டு 1180 பேரும் 2024ஆம் ஆண்டு 1614 பேரும், 2025 இறுதி வரை 2654 பேராக காணப்பட்டதுடன் மூன்று வருடங்களில் 5,449 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதுபோன்று, யாழ். மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களில் 14786 பேர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் சுமார் 2000 க்கு மேற்பட்டோர் புனர்வாழ்வு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ். மாவட்டத்தை பொருத்தவரையில் உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைகளுடன் தொடர்புடைய நபர்கள் எண்ணிக்கை அதிகரித்த போக்கையே கொண்டுள்ளது.