சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் நுவரெலியாவில் கைது
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான கஹனவிடகே டொன் நந்தசேன நுவரெலியாவில் மறைந்திருந்த போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணை
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி கிரிபத்கொட மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுகளில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 9 கிலோகிராம் ஐஸ் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு வந்த பிரதான கடத்தல்காரர் இவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பாண்டு என அழைக்கப்படும் அவரது சகோதரரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் இந்தியாவில் தலைமறைவாக இருந்து கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி இலங்கை திரும்பியதுடன் தனது இரண்டாவது மனைவியுடன் நுவரெலியாவில் மறைந்திருந்த போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் வத்தளை மற்றும் கணேமுல்ல பிரதேசத்தில் சந்தேகநபருக்கு சொந்தமான இரண்டு பெரிய வீடுகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |