மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் பொலிஸார் அதிரடி சோதனை : விபத்துக்களைத் தடுக்க புதிய நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பயன்படுத்தி விட்டு, வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை கண்டறிய மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்துடன் இணைந்து வீதிகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி அதன் சாரதிகளை நடமாடும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.
குறித்த நடவடிக்கையானது, இன்று(11.11.2026) மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்து, தினம் தினம் இடம்பெற்றுவரும் வாகன வீதி விபத்துக்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கான சோதனை
இந்த வீதி விபத்துக்களை தடுப்பதற்கான விசேட திட்டத்தின் கீழ் மதுபோதை மற்றும் மதுபானங்கள் பயன்படுத்தி விட்டு வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை கண்டறிய நடமாடும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய இன்று(11) மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த நடமாடும் மருத்துவ பரிசோதனை நடவடிக்கை மட்டக்களப்பு நகரில் முக்கிய சந்திகளில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வீதியால் பிரயாணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் தொடக்கம் கனரக வாகனம் வரை நிறுத்தி அதன் சாரதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் விசேட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடமாடும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆலோசனையின் படி, வாகன சாரதிகள் மீது குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


