திருநெல்வேலி, கொக்குவில் சந்தைகளில் போதைப்பொருள் மாபியாக்கள் அடாவடி
யாழ். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் குழுக்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொக்குவில் சந்தையில் மரக்கறி கொள்வளவு செய்வதற்கு வருகைதந்த ஒருவருடன் வன்முறைக் குழுவொன்று நேற்று முரண்பட்டதுடன், அவர் மீது தாக்குதல்களையும் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து, சந்தைக்குச் சென்ற பலர் இன்னல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

சந்தைகளில் அடாவடி
அத்துடன், சந்தையில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கும் பிரதேச சபைக்கும் அறிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அதேவேளை கடந்த வாரம் திருநெல்வேலி சந்தையினுள் சனநடமாட்டம் அதிமாக காணப்பட்ட பகல் வேளை போதையில் ஒருவர் தனது ஆடைகளை களைந்து, தகாத வார்த்தைகளை பேசி அட்டகாசம் புரிந்துள்ளார்.
இந்நிலையில், அது தொடர்பில் பொலிஸார் மற்றும் நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவித்தும், அவர்கள் சம்பவ இடத்துக்கு வராத நிலையில் போதையில் இறுதியில் அட்டகாசம் புரிந்தவரின் குடும்பத்தினர் வந்து அவரை அழைத்து சென்றிருந்தனர்.

போதைப்பொருள் விற்பனை
அதேபோன்று, ஒருசில தினங்களுக்கு முன்னர், சந்தைக்குள் போதையில் இரு தரப்பினர் முரண்பட்டு வாழைப்பழம் விற்பனை செய்யும் கடைக்குள் ஒரு தரப்பு புகுந்து அங்கிருந்த கத்தியை எடுத்து மற்றைய தரப்பின் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இவ்வாறாக இரு சந்தைகளிலும் நாளுக்கு நாள் போதைப்பொருள் விற்பனைக் குழுக்கள், போதைப்பொருளை வாங்கிப் பாவிப்பவர்கள் மற்றும் வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து செல்லும் நிலையில் நல்லூர் பிரதேச சபையும் பொலிஸாரும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |