இலங்கையில் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகர் தினுக்க டுபாயில் மரணம்!
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளிகளின் குழுவைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் வர்த்தகருமான “வாழைத்தோட்டம் தினுக்க” மாரடைப்பு காரணமாக, டுபாயில் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குறித்த நபர், நான்கு வருடங்களுக்கு முன்னர், நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டார்.
அவர், சில நாட்களாக நோய்வாய் பட்டிருந்தார் என்றும் வீட்டிலிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது, அவருக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தினுக்க துபாய்க்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் தனது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை அங்கிருந்து செயற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, மரணம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் மூத்த பொலி11ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தினுக்கவின் மரணத்தை அறிந்த பின், கொழும்பு 12, மிஹிந்து மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வெள்ளைக் கொடிகள் ஏற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.