தெற்கு கடலில் கடத்தல்! 270 கிலோகிராம் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்
தெற்கு கடல் பகுதியில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளும், 11 சந்தேக நபர்களும் தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த இரண்டு மீன்பிடி படகுகளை கண்டறிய கடற்படை நீண்ட தூர கண்காணிப்பு படகுகளை பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
11 பேர் கைது
இதன்படி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகில் 5 பேரும், மற்றொரு படகில் 6 பேரும் பயணித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த இரண்டு படகுகளிலும் சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளும், 11 சந்தேக நபர்களும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.