காலிமுகத்திடல் போராட்டத்தில் போதைப் பொருள் அடிமைகள் மற்றும் மோசடியாளர்கள்:வீரவங்ச
காலிமுகத் திடல் போராட்டம் ஆரம்பத்தில் மிகவும் அழகான, இயற்கை பசளை பயிர் செய்கை போன்று சிறந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் என்ற போதிலும் தற்போது அது போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இயற்கை பசளை பயிர் செய்கை போன்ற சிறந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத் திடல் போராட்டம் தற்போது இரசாயன பயிர் செய்கைக்கு ஏற்பட்ட நிலைமை போல் மாறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தடுக்க முயற்சிக்கும் போராட்டகாரர்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்திருந்த போது, அவர்களின் நடவடிக்கைகளுக்கு போராட்டகாரர்கள் தடையேற்படுத்தினர்.
நாடு ஸ்திரமற்ற நிலைமையில் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக்கொள்வதை தடுப்பது போராட்டகாரர்களின் நோக்கம்.
போராட்டகாரர்கள் நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்ற செயற்படும் போது ஏன் இன்னும் பொறுத்து கொண்டிருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்புவதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.