இலங்கையில் போதைப்பொருள் பயன்பாட்டால் நாளொன்றுக்கு 55 பேர் மரணம்!
இலங்கையில் போதைப்பொருள் பாவனை காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி, நாளொன்றுக்குச் சராசரியாக 55 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் அமரநாத் தென்ன இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் 'கிறிஸ்டன் பார்க்' ஹோட்டலில் நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதில் ஊடகவியலாளர்களின் பங்கு மற்றும் பொறுப்பு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போதைப்பொருள் பாவனை காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு 55 பேர் வீதம், ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் போதைப்பொருள் பாவனைக்காக நாளொன்றுக்குச் சுமார் 56 கோடி ரூபா பணத்தை செலவிடுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 20% முதல் 22% வரையானோர் மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதில் ஆண்களில் 43% வீதமானோரும், பெண்களில் 12% வீதமானோரும் மதுபானப் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.