தாடி வளர்த்த போதைக்கு அடிமையானவர்கள்! காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தொடர்பில் சர்ச்சையாக பேசிய உறுப்பினர்
காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது இடங்களில் போதைப்பொருள் பாவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஹெராயின், ஐஸ், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அங்கு பயன்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு வகை போதைப்பொருளுக்கும் தனித்தனி சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெரோயின் பொதிகள் மற்றும் கஞ்சா சிகரெட்டுகளுடன் காலி முகத்திடல் போராட்ட களத்தில் இணைந்து கொண்ட குழுவொன்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் காட்டப்படும்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது பலத்தை வெளிப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். ராஜபக்ச தரப்பினர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ராஜபக்சவை துரத்த தாடி வளர்த்த போதைக்கு அடிமையானவர்களால் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் எதிர்காலத்தில் போராடுபவர்களுக்கு காட்டப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மேலும் தெரிவித்துள்ளார்.
“இது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு கிடையாது இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். 71ம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க கிளர்ச்சியை கட்டுப்படுத்தினார் என்றால், ஜே.ஆர். மற்றும் பிரேமதாச ஆகியோர் கிளர்ச்சியை ஒடுக்கினார்கள் என்றால், பயங்கரவாதத்தை ஒழித்தவருக்கு ஏன் போராட்டக்காரர்களை ஒடுக்க முடியவில்லை.
எனக்கு புரிந்த வகையில் தீவிரவாதிகளிடம் பௌத்த கொள்கைகளை போதிப்பதில் பயனில்லை. இவர்களை கவனிக்கக வேண்டிய முறையொன்று காணப்படுகின்றது அந்த முறையில் இவர்களை கவனிக்க வேண்டும். அவர்களை அவ்வாறு கவனிக்காத காரணத்தினால் இன்று பின்விளைவுளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.