எல்லைக்குள் புகுந்த அமெரிக்க நீர்மூழ்கியை விரட்டியடித்த ரஷ்யாவின் போர்க் கப்பல் - அறிவித்தது மொஸ்கோ
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை, ரஷ்யாவின் நீர்மூழ்கி அழிப்பு - போர் கப்பல், பின் தொடர்ந்து சென்று அதனை கடல் எல்லைக்கு அப்பால் விரட்டியதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
இந்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நேற்று குரில் தீவுக்கு அருகில் வைத்து பின்தொடர்ந்து சென்ற ரஷ்ய நீர்மூழ்கி அழிப்பு போர் கப்பல், ரஷ்ய எல்லைக்கு அப்பால் விரட்டியுள்ளது.
அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாகவும் ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் அமெரிக்க இராணுவம் இதனை நேற்றைய தினமே மறுத்துள்ளதுடன் ரஷ்ய பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதனை மறுத்துள்ள அமெரிக்க இராணுவப் பேச்சாளரான கெப்டன் கயில் ரென்ஸ், தமக்கு தமது நாட்டின் நீர்மூழ்கி கப்பல் நிலைக்கொண்டுள்ள இடங்களை பகிரங்கப்படுத்த முடியாது எனவும் தாம் சர்வதேச கடல்களில் பாதுகாப்பாக இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஏனைய நாடுகள் தமது கடல் எல்லைக்குள் நுழையாமல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பது வழக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் மற்றும் ரஷ்ய படையினர் கிழக்கு ஐரோப்பாவில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உக்ரைன் தொடர்பான ரஷ்ய மற்றும் அமெரிக்காவின் இந்த போர் நகர்வு நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையிலான படைகளுக்கு இடையில் போர் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.