நுவரெலியாவில் உச்சம் தொடும் வறட்சி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வறட்சியான காலநிலை காணப்படுகின்றது.
இதனால் வெயிலின் தாக்கமும் வெப்பமும் சுட்டெரிக்கின்றன.வெப்பம் காரணமாக நீர் நீலைகளினதும் நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருவதாக நீர்த் தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பம் காரணமாக பல பிரதேசங்களில் குடிநீருக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குடிநீரினை மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் பாவிக்குமாறு நீர் வடிகால் அமைப்பு சபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடும் வெப்பம்
கடும் வெப்பம் காரணமாக காசல்ரி மவுசாக்கலை கெனியோன்,லக்ஸபான நவ லக்ஸபான,மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்களின் நீர் மட்டமும் கனிசமான அளவு நீர் தாழிறங்கியுள்ளன.

இதனால் எதிர்காலத்தில் நீர் மின் உற்பத்தியின் அளவு குறைவடையும் அபாயம் காணப்படுவதுடன் விவசாய நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நீர் வளம் மற்றும் நில வளம் நிறைந்துள்ள நுவரெலியா மாவட்டத்தில் இந்த அளவுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம் வறட்சி காலங்களில் தொடர்ச்சியாக காடுகளுக்கு தீ வைப்பது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர் தீ வைப்பு
தொடர் தீ வைப்பு காரணமாக புவி வெப்பமடைந்து நீரூற்றுக்கள் அற்றுப்போய் உள்ளமையும் நீர் போசன பிரதேசங்களுக்கு காடுகளுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதனால் வழமைக்கு மாறான வெப்பநிலை காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றர்.

இதே வேளை உலகின் புகழ்பெற்ற நீர் வீழ்ச்சிகளான டெவோன் சென்கிளையார் நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டம் குறைந்துள்ளமையினால் நீர் வீழ்ச்சியின் அழகும் குன்றிப்போய் உள்ளன.
இதனால் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றலா பிரயாணிகளின் வருகை கணிசமான அளவு குறைந்துள்ளதாக இதனால் அந்தப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.