ட்ரோன் பயன்பாடு குறித்து அறிமுகமாகும் புதிய நடைமுறை
ட்ரோன்களை ஒழுங்குபடுத்துவதற்கான சரியான நடைமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சிவில் விமான சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வாணிக மதிப்பு கொண்ட அனைத்து ட்ரோன்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ட்ரோன்களை முறையாக ஒழுங்குபடுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரோன்களை இரண்டு பிரிவுகளாக பார்க்கலாம். ஒன்று மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள், மற்றொன்று மனிதர்கள் இல்லாமல் இயக்கப்படும் ட்ரோன் விமானங்கள் எனத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்...
இவை அனைத்தையும் முறையாக இயக்குவதற்கான விதிமுறைகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஒழுங்குமுறை திட்டம் முதன்முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரோன்கள் எடை அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
250 கிராம் முதல் 25 கிலோ கிராம் வரை உள்ள ட்ரோன்கள் இந்த ஒழுங்குமுறைகளின் கீழ் வருகின்றன. 250 கிராமிற்கு குறைவான எடையுடையவை விளையாட்டுப் பொருள் வகையாக கருதப்படுவதால், அவற்றை ஒழுங்குபடுத்த சிவில் விமான சேவை அதிகாரசபை திட்டமிடவில்லை.
ஆனால் 250 கிராமிற்கு மேற்பட்டதும், வாணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதுமான ட்ரோன் விமானங்கள் கட்டாயமாக ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படும்.
அத்துடன், ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன. அவற்றுக்கு அமைவாக செயற்பட்டால் எந்த பிரச்சினையும் ஏற்படாது” என அவர் தெரிவித்துள்ளார்.