திருகோணமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம் குறித்து வெளியான தகவல்
புதிய இணைப்பு
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விமான எதிர்ப்பு பயிற்சிகளிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானமே மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் எரன்டகீகனகே தெரிவித்துள்ளார்.
இந்த ஆளில்லா விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட இல்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓடிசாவிலிருந்து இலங்கை
இந்த ஆளில்லா விமானம் இலங்கையின் முப்படைகளிற்கு சொந்தமானதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஆளில்லா விமானம் பயிற்சியின் போது தவறுதலாக இலங்கையின் கடற்பரப்பில் தரையிறங்கியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விமானத்தில் வெடிபொருட்கள் இருக்கவில்லை, இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022இல் இவ்வாறான ஆளில்லா விமானமொன்று ஓடிசாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த ஆளில்லா விமானமொன்று சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்தொழிலாளர்கள் சிலர் நேற்றிரவு கடலுக்குச் சென்றிருந்த நிலையில், கடலில் மிதந்து கொண்டிருந்த ட்ரோன் ரக விமானம் ஒன்றைக் கண்டுள்ளனர்.
அதனையடுத்து குறித்த ட்ரோன் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ட்ரோன் ரக விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |