சீரற்ற காலநிலையால் அவதிக்குள்ளாகும் வாகன சாரதிகள்- விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை..!
மலையகப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று(05.06.2026) கடும் பனி மூட்டம் நிலவியதால் பல பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவலை, தியகல, வட்டவலை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, ரததல்ல, நானுஓயா மற்றும் நுவரெலியா பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சாலேவுக்குக் கடும் சித்திரவதை: புலம்பெயர் தமிழர்களுக்காக இதை செய்கிறாரா..! மொட்டுக் கட்சி கேள்வி
கடும் பனி மூட்டத்தால் பாதிக்கப்படும் மலையகம்
பல இடங்களில் பார்வைத்தூரம் மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண்பதும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, வளைவுகள் நிறைந்த மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகனங்கள் பெரும் அவதானத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

பனி மூட்டம் காரணமாக வீதிகள் ஈரப்பதமாக காணப்படுவதுடன், வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளியும் மங்கலாகவே தென்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனால் வாகன சாரதிகள் குறைந்த வேகத்தில் பயணிப்பதுடன், முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகளை பயன்படுத்தி பயணிக்குமாறும், முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளியை பேணுமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பாதசாரிகளும் வீதிகளை கடக்கும் போது கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் வானிலை அறிவிப்புகளை அவதானித்து பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மலையகத்தின் பல பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால், குறிப்பாக ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் தங்களது வாகனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.