மெட்ரோ பேருந்தை மோதிய தனியார் பேருந்து சாரதி கைது! சிசிடிவியில் பதிவான காட்சி
கெஸ்பேவ – கொழும்பு வீதியின் மிரிஸ்வத்தை பகுதியில், மெட்ரோ பேருந்தை திட்டமிட்டு மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் சொகுசு பேருந்து சாரதி ஒருவர் பிலியந்தலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மெட்ரோ பேருந்து
கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்து, பின்னால் வந்த குறித்த சொகுசு பேருந்து கெஸ்பேவ சந்தியிலிருந்து பின்தொடர்ந்துள்ளது.

இதன்போது, சொகுசுபேருந்தின் பிரதான முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியும், தொடர்ந்து ஒலியெழுப்பியபடியும் பாதுகாப்பற்ற முறையில் முந்திச் செல்ல முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பேருந்தை முந்திச் சென்ற சொகுசு பேருந்து, அதன் பின்பகுதியால் மெட்ரோ பேருந்தின் முன்புற வலது மூலையில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவத்தில் மெட்ரோ பேருந்தின் வலது பக்கக் கண்ணாடி மற்றும் அதன் கீழே பொருத்தப்பட்டிருந்த மற்றுமொரு கண்ணாடி ஆகியன உடைந்து சேதமடைந்துள்ளன. விபத்தினால் பேருந்துக்கு ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு 342,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்து இடம்பெற்ற விதம் அருகிலுள்ள சிசிடிவி கமராவிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை – பொகுணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.