இயக்கி உணவகம் வைபவ ரீதியாக கடற்றொழில் அமைச்சரால் திறந்து வைப்பு
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இயக்கச்சியில் இயக்கி உணவகம் வைபவ ரீதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மற்றும் பச்சிலைப்பள்ளியின் பிரதேச செயலாளர், பளை பொலிஸ் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் உரையாற்றுகையில்,
அம்மாச்சி போன்ற கட்டமைப்பில் இயக்கி என்கின்ற இந்த கட்டமைப்பும் சிறந்த முயற்சி. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்கிறோம்.
மேலும் கௌதாரிமுனை கடல் அட்டை பண்ணையினை தடுத்து நிறுத்தும் முகமாக தங்களது சுயலாப அரசியலுக்காக சில கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.
2017 ஆரம்பத்திலும் 2016 கடைசியிலும் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அந்த ஆட்சியில் இலங்கை சீனா கூட்டுறவாக அரியாலையில் அனுமதி பெற்று 4, 5 பரப்பில் தனியார் ஒருவருடைய காணியினை குத்தகைக்குப் பெற்று கடல் அட்டை இனப்பெருக்க நிலையம் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்.
அதன் பின் அரியலைப் பகுதியில் 10 ஏக்கர் நிலத்தினை பெற்று இனப்பெருக்கம் செய்யப்பட்ட கடல் அட்டை குஞ்சுகளை வளர்த்தெடுப்பதற்காக ஒரு நேசரி ஒன்று செய்திருக்கிறார்கள்.
குறித்த செயற்பாடு சரியாக அமையாத காரணத்தினால் கௌதாரி முனையில் உள்ள கடல் தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து ஒரு பரீட்சார்த்தமாக கௌதாரி முனையில் கடல் அட்டை பண்ணை அமைத்துள்ளனர்.
அதை விட நாங்கள் வடமாகாணத்தில் நூற்றுக்கணக்கான கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.




