இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் மிகப்பெரிய 52 அரச நிறுவனங்களின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிதிக்கூற்றுக்களை உரிய நேரத்தில் வெளியிடுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும், இந்த கடன் திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களின் ஆளுமையை வலுப்படுத்தவும் அவற்றின் கடன் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க
ஐந்தாவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக முக்கிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதை நேற்று ஊடகங்களிடம் அறிவித்தபோது சர்வதேச நாணய நிதியம் இதனைத் தெரிவித்தது.
இந்த நிபந்தனைகள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, சர்வதேச நாணய நிதிய செயற்குழு அங்கீகாரம் வழங்கிய பின்னர், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மீட்டெடுப்பதற்கான நடுத்தர கால மூலோபாயத் திட்டத்தை அதிகாரிகள் தயாரித்து வருவதாகவும், நிறுவனத்தின் கடனில் ஒரு பகுதியை செலுத்துவதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நினைவுபடுத்தியுள்ளது.
விமான நிறுவனம் தனது சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க நிதி ஆலோசகர் ஒருவரை நியமித்துள்ளது.
இருப்பினும், இந்த செயல்முறை வேகப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் வருமானப் பற்றாக்குறை
அதேநேரம், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு கொள்கைகள் நாட்டின் ஆடை மற்றும் இறப்பர் தொழில்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, மோட்டார் வாகன இறக்குமதிக்காக சுமார் 350 மில்லியன் டொலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களைத் (Letter of Credit) திறப்பதில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
எதிர்காலத்தில் வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டால், எதிர்பாராத வருமான நடவடிக்கைகளை செயற்படுத்த அதிகாரிகள் உறுதியுடன் இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
விஸ்தரிக்கப்பட்ட கடன் திட்டத்தின் தற்போதைய மதிப்பாய்வை முடித்து, செயற்குழுவின் ஒப்புதலைப் பெற இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் இவான் பாபஜோர்ஜியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




